NATIONAL

முகமட் அடிப் மரண விவகாரத்தை தேர்தல் பரப்புரையாக்காதீர்!

புத்ரா ஜெயா, ஜன.18:

தீயணைப்பு படை வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விவகாரத்தை கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் தரப்பினரின் நடவடிக்கை வருத்தமளிப்பதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை கூறுகிறது.

இந்நடவடிக்கை இன விவகாரத்தை தோற்றுவிக்கக்கூடும் என்பதோடு நடைபெற்று வரும் புலன் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கலாம் என்றும் இத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை மற்றும் மரண விசாரணை சுமூகமாக நடப்பதற்கு அனைத்து தரப்பினரும் வாய்ப்பளிக்க வேண்டும். மாறாக, இந்த விவகாரம் குறித்து வெளியிடும் எதிர்மறையான கருத்துகள் நடந்து கொண்டிருக்கும் விசாரணை மற்றும் சாட்சியங்களுக்கு முரணாக அமையக் கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

மரணமடைந்த அடிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகள் சட்ட சிக்கலையும் ஏற்படுத்தக் கூடும். தனிநபர் சுயநலத்திற்காக இவ்விவகாரம் பயன்படுத்தப்படுவது தவறு என்றார் அவர்.


Pengarang :