SELANGOR

வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பு : விதிகளுக்கு உட்பட வேண்டும்

பத்து கேவ்ஸ், ஜன்.21:

பொது மக்கள் பாதுகாப்பு பிரச்னை உட்பட இதர பிரச்னைகள் ஏதும் எதிர்காலத்தில் ஏற்படாதிருக்க சிலாங்கூரில் வழிபாட்டு தலங்களை விதிகளுக்கு உட்பட்டு நிர்மாணிக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்களை நிர்மாணித்த பின்னர் அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

அனைத்து தரப்பினரும் இந்த விதிகளுக்கு உட்பட்டுள்ளனர். இதுவே அரசின் கொள்கையாகும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், இந்த விவகாரத்தில் எவருக்கும் தடை அல்லது மன இறுக்கம் ஏதும் ஏற்படாது எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

பத்துமலைத் திருத்தலத்தில் பக்தர்களுக்கு பழங்களும் குளிர்பானமும் வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் பேசினார்.

வழிபாட்டு தலங்களை நிர்மாணிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால், பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.

மேலும், நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் குடியிருப்பு தகுதி சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :