SELANGOR

“வேஸ்” பயன்பாடு விரிவாக்கம் : பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை

கோலாலம்பூர், ஜன.10:

சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பழுது குறித்து மக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏற்ப வேஸ் செயலி பயன்பாட்டை விரிவுப் படுத்த மாநில அரசு விருப்பம் கொண்டுள்ளது.

தற்போது அந்த செயலி பயன்பாடு மாநிலத்தின் பொறுப்பில் உள்ள சாலைகளை மட்டும் உள்ளடக்கியுள்ளது. ஆனால், கூட்டரசு அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள சாலைகளும் பழுதடைந்துள்ளன என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.

“நமது ஒதுக்கீடுகளை கூட்டரசு சாலைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சில நடைமுறைகள் உள்ளன. அனுமதி அளித்தால், இதற்கென செலவு செய்ய நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனெனில், கிள்ளான் துறைமுகம், மேரு மற்றும் கோலசிலாங்கூர் சாலைகளைப் பயன்படுத்தும் கன ரக வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதற்கு பழுதான சாலைகளும் ஒரு காரணமாகும்.”

“சட்டமைப்பு அட்டவணை 9 மற்றும் 10, மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கத்தின் பொறுப்புகளை வரையறுத்துள்ளன. ஆயினும், மக்கள் சுபிட்சமாக வாழ்வதே நமது நோக்கமாகும். எனவே, இதை செயல்படுத்த நாம் முயற்சிப்போம்.”

வேஸ் செயலி பயன்பாடு தவிர்த்து, சாலைகளில் காணப்படும் குழிகள் மற்றும் பழுதுகளைச் சீர் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவி1ல் 2019 சிலாங்கூர் இலக்கு : “ ஒன்றிணைந்து முன்னேறுவோம் ‘ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மந்திரி பெசார் கேட்டுக் கொண்டார்.


Pengarang :