SELANGOR

அபராதத்தைத் தவிர்க்க குப்பைத் தொட்டியை வைத்திருப்பீர்

ஷா ஆலம், பிப்.9:

குடியிருப்பாளர்கள் குறிப்பாக அம்பாங் பெச்சா தேசிய இடைநிலைப் பள்ளியின் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் அவரவர் வீடுகளில் குப்பைத் தொட்டியை வைத்திருக்கும்படி உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் கேட்டுக் கொள்கிறது.

ஒரு வாரத்தில் மூன்று முறை குப்பைகளை அகற்றும் பணியை தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக மன்றத்தின் திடக்கழிவு மற்றும் பொது இடத்தூய்மை துறை பேச்சாளர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிரில் இருக்கும் கார் நிறுத்துமிடப் பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்றார் அவர்.

முன்னதாக இந்தப் பகுதியில் பல முறை துப்புரவு நடவடிக்கைகளை தங்கள் தரப்பு எடுத்துள்ள போதிலும், குடியிருப்பாளர்களில் சிலர் தொடர்ந்து இந்த இடத்தில் குப்பைகளை வீசி வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

தனித் தனியாக குப்பைத் தொட்டிகளைக் கொண்டிராத வீட்டுரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :