SELANGOR

அமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மத்திய அரசின் சார்பில் பொருளாதார விவகார அமைச்சராக தேர்வுக்கு பிறகு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை அலங்கரித்த அமிரூடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது பொது மக்கள் அதிக அளவில் நம்பிக்கை கொண்டுள்ளதாக டாருல் ஏசான் கல்லூரி அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் டாருல் ஏசான் கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் டத்தோ முகமட் ரிஸ்வான் ஓத்மான் நேற்று தனது முழு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதில் செமிஞ்சே சட்ட மன்றத்தில் 61% வாக்காளர்கள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரியின் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

2008-க்கு பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்திய சமுதாயத்திற்கு மறுமலர்ச்சியை கொடுத்தது என்றே நாம் கருதலாம். செமிஞ்சே சட்ட மன்றத்தில் இந்திய வாக்காளர்களின் ஆதரவு 82% அமிரூடின் மீது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்ரா ஜெயாவை கைப்பற்றி 8 மாதங்கள் ஆகியும் இந்திய சமுதாயம் இன்னும் பாக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மன நிறைவு கொண்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆகவே எதிர் வரும் மார்ச் 2-இல் நடைபெறவிருக்கும் செமிஞ்சே இடைத்தேர்தலில் இந்திய சமுதாயத்தின் வாக்குகள் மாநில அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து விடும் என்று கூறினால் அது மிகையாகாது.

இது மட்டுமின்றி, மாநில மந்திரி பெசார் தனது நிர்வாகத்தில் புதியதாக இருந்தாலும், இது வரை வரலாறு காணாத வகையில் அந்நிய முதலீடுகளை சிலாங்கூர் மாநிலத்திற்கு கொண்டு வந்துள்ளது அமிரூடின் ஷாரியின் நிர்வாகத் திறமையை காட்டுகிறது. பல்வேறு இன மற்றும் மத அடிப்படையில் அரசியல் சித்தாந்தங்களை பயன்படுத்தி மலாய்காரர்களின் வாக்குகளை கவர முனையும் தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சிகளின் தந்திரங்களை மந்திரி பெசாரின் நிர்வாகத் திறமை முறியடிக்கும் என்று உறுதி கூறலாம். அவரோடு சேர்ந்து பொருளாதார விவகார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் வியூகம் எதிர்க்கட்சிகளை தவிடு பொடி செய்து விடும் என்பது உறுதி. புதிய மலேசியாவை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பாடுபட்டு வரும் மந்திரி பெசார் மற்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோருக்கு இந்திய சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே சிலாங்கூர் இன்றுவின் எதிர்ப்பார்ப்பு.

கு. குணசேகரன் குப்பன்

சிலாங்கூர் இன்று ஆசிரியர்


Pengarang :