NATIONAL

நாட்டின் பொருளாதார நாடித் துடிப்பாக கூட்டரசு பிரதேசம் திகழ்கிறது

கோலாலம்பூர், பிப்.1:

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய நாடித் துடிப்பாக கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய கூட்டரசு பிரதேசங்கள் திகழ்கின்றன என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

2017ஆம் ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கூட்டரசு பிரதேசம் 13.4 விழுக்காட்டு பங்களிப்பை ஆற்றியுள்ளதாக கூட்டரசு பிரதேச கொண்டாட்டத்தையொட்டி வெளியிட்ட செய்தியில் அவர் தெரிவித்தார்.

மலேசிய புள்ளிவிபரத் துறை 2018ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளவிபரங்களின்படி இந்தக் கூட்டரசு பிரதேசங்களின் மொத்த மக்கள் தொகை 1.98 மில்லியன் ஆகும்.

“கோலாலம்பூரை அனைத்துலக தரத்திலான நவீன வாணிப மாநகரமாகவும் புத்ரா ஜெயாவை கூட்டரசு அரசாங்க நிர்வாக மையமாகவும் லாபுவானை நிதி மையமாகவும் உருவாக்கும் இலக்கு காரணமாக துரித வளர்ச்சி கண்டு வரும் நாடுகளுடன் மலேசியா போட்டியிட முடிகிறது” என்றார் அவர்.

1974ஆம் ஆண்டு கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது முதல் பிப்ரவரி 1ஆம் தேதி கூட்டரசு பிரதேச நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


Pengarang :