NATIONAL

நாட்டின் ஸ்குவாஷ் ராணி ஓய்வு பெறுகிறார்!

கோலாலம்பூர், பிப்.19:

20 ஆண்டு காலமாக நாட்டின் ஸ்குவாஷ் போட்டியின் முடிசூடா ராணியாக வலம் வந்த நிக்கோல் டேவிட் வரும் ஜூன் 19ஆம் தேதி முடிவுறும் 2018 நிபுணத்துவ ஸ்குவாஷ் சங்க பருவத்துடன் இந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

எட்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிக்கோல், தமது பெற்றோர் மற்றும் பயிற்றுநர் லிஸ் இர்விங் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்த பின்னர் இந்த முடிவைத் தாம் எடுத்ததாக தெரிவித்தார்.

“ஒவ்வொரு விளையாட்டாளரும் கடக்க வேண்டிய ஒரு தருணம் இது. இத்துறையில் சாதிக்க வேண்டியவற்றை சாதிப்பதற்கு அனைத்து வகையான முயற்சிகளை எடுத்த பின்பு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. இந்த முடிவு குறித்து சிலகாலமாகவே சிந்தித்து வந்துள்ளேன்” என்றார் அவர்.

இந்த விளையாட்டின் உச்சத்தில் இருப்பதற்கு உடலாலும் மனதாலும் தாம் அதிகளவு உழைத்துள்ளதாகவும் இந்தப் பருவத்தின் ஆட்டத்தில் மிகச் சிறந்த ஆட்டத்தை தந்துவிட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல தாம் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

36 வயதான நிக்கோல், இந்தத் துறையில் அதிக காலம் முதலாவது இடத்தில் இருந்த விளையாட்டாளர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Pengarang :