NATIONAL

போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் மலேசியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், பிப்.4:

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மலேசியர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு அதிகமாக இருப்பது வருத்தம் அளிப்பதாக போதைப் பொருள் குற்றவியல் பிரிவின் துணைக் கமிஷனர் சுல்கிப்ளி அலி கூறினார்.

ஆயினும், இந்நடவடிக்கை எத்தனை விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதை அவர் வெளியிடவில்லை. இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு பொருளாதார சிக்கலும் வாழ்வாதாரப் பிரச்னையும் முக்கிய காரணங்களாக உள்ளன என்று அவர் சொன்னார்.

தடைச் செய்யப்பட்ட இப்பொருளைக் கடத்தும் நபர்களுக்கு தாங்கள் பிடிபடக் கூடும் என்பதை அறிந்திருந்தாலும் அச்செயலுக்காக வழங்கப்படும் சன்மானம் 5 முதல் 10 ஆயிரம் வெள்ளியாக இருப்பதால் இதில் துணிந்து ஈடுபடுகின்றனர் என்றார் அவர்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு இந்த சட்டவிரோத நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் ஹாங்காங்கில் மட்டும் 23 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை இரு வகைப்படும். ஒன்று, மலேசியாவில் இருந்து வெளிநாட்டுக்கு போதைப் பொருளைக் கொண்டுச் சேர்ப்பது. மற்றொரு வகை, வெளிநாட்டிற்குச் சென்று அங்கிருந்து போதைப் பொருளை மற்றொரு நாட்டுக்கு கொண்டு செல்வதாகும்.


Pengarang :