SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: கார் நிறுத்தும் இடம் விவகாரம் குறித்து நஜீப் வெளியிட்ட குற்றச்சாட்டு தவறான தகவல்

ஷா ஆலம், மார்ச் 31:

கார் நிறுத்தும் இடம் கட்டண வசூல் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முழு விவரங்களையும் அறிந்த பின்னரே ஆக்கப்பூர்வமான செய்தியை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் தெரிவித்தார். தற்போதைய பாக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் செய்த ஒப்பந்தங்களை சுமந்து செல்லும் கட்டாயத்தில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

” நஜீப் கூறியது போல ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) 70,000 கார் நிறுத்தும் இடங்களை எதிர் வரும் ஏப்ரல் 1-இல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இதனால் கட்டண உயர்வு ஏற்படுகிறது என அவர் குறிப்பிட்டது மிக தவறான கூற்று. நான், நஜீப்பிற்கு செய்தியை வெளியிடும் முன்னர் தகவல்களை சரியாக புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஒப்பந்தம் 1999இல் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனத்துடன் செய்தது ஆகும்,” என்று தனது அகப்பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில், குவாந்தான் நகராண்மைக் கழகம் கடந்த 2006 இல் இருந்து 60 சென் கட்டணம் வசூல் செய்து வருகிறது என்று ஸீ ஹான் கூறியுள்ளார். மேலும், கேமரன் மலை மாவட்ட மன்றம் இடைத் தேர்தலுக்கு பிறகு 60 சென்னாக உயர்த்தி உள்ளது.

” இதுவும் பாக்காத்தான் தவறா? நஜீப்பிற்கு மறதி நோய் பற்றி கொண்டது,” என அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளாக எம்பிஎஸ்ஏ கார் நிறுத்தும் இட கட்டணங்களை உயர்த்தவில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது. மாநகராட்சி மன்றங்களில் ஆக குறைவான கட்டணங்களை விதிப்பது எம்பிஎஸ்ஏ என்றால் அது மிகையாகாது.

 


Pengarang :