NATIONAL

சிப்பாங் ரெங்கம், சியிபி1 தோட்ட திட கழிவு பொருள் மையம் மூடப்பட்டது

புத்ரா ஜெயா, மார்ச் 26

சிப்பாங் ரெங்கம், சியிபி 1 தோட்ட திட கழிவு பொருள் ஒழிப்பு மையத்தின் நடவடிக்கை இன்று மார்ச் 26ஆம் தேதி தொடங்கி முழுமையாக நிறுத்தப்பட்டடிருப்பதாக   வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு கூறியது.

இந்த மையத்தில் இருந்து கழிவு நீர் அருகில் உள்ள ஆற்றில் கலப்பதாகப் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த மையம் மூடப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

அதே வேளையில், உறிஞ்சப்பட்ட நீரின் சுத்திகரிப்பு ஆற்றலை மேம்படுத்தும் முயற்சியாக அமைச்சு இந்த மையங்களில்  மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி மூன்று நடமாடும் உறிஞ்சு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கும்படி அவற்றின் நடத்துனர்களைப் பணித்திருப்பதாகவும் அமைச்சர் விவரித்தார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் திட கழிவு பொருள்கள் சீலோங் குப்பை ஒழிப்பு மையத்திற்கு அனுப்பப்படும். தற்போதைய குப்பை ஒழிப்பு மையத்தில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீர்  உடனடியாக சுத்திகரிக்கப்படுவதற்கு ஏதுவாக மார்ச் 27ஆம் தேதி தொடங்கி கொள்கலன் லோரி வழி சீலோங் குப்பை ஒழிப்பு மையத்திற்கு மாற்றப்படும்  என்றும் அறிக்கை வழி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதைத் தவிர்த்து, அமைச்சின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றும் நடைபெறும். இதில் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவ மாற்றம், சுற்றுச் சூழல் துறை, ஜோகூர் மாநில பொருளாதார திட்டமிடல் குழு, ஜோகூர் குடிநீர் கண்காணிப்பு வாரியம், ஜோகூர் குடிநீர் நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.

மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் மண்ணில் இருந்து உறிஞ்சப்படும் நீர் அருகில் உள்ள ஆறுகளுக்கு எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரும் என்பது குறித்து கலந்தாலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த குப்பை ஒழிப்பு மையத்தின் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் கடந்த 2017 ஏப்ரல் மாதம் மீட்டுக் கொண்டது. நவீனமய குப்பை ஒழிப்பு மையத்தை உருவாக்குவது, இதன் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை கூட்டரசு அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது.

6 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்த சிப்பாங் ரெங்கம், சியிபி1 தோட்ட குப்பை ஒழிப்பு மையம் கடந்த 2003 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.


Pengarang :