SELANGOR

சிலாங்கூரில் 983  விவேக வாடகை வீடுகள்

ஷா ஆலாம், மார்ச் 25

மக்களின் வசதிக்காக  சிலாங்கூர் முழுமையும் மொத்தம் 983 விவேக வாடகை வீடுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றில் 341 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள வேளையில் 101 வீடுகள் பொது மக்களின் விண்ணப்பங்களுக்காகத் திறந்து விடப்பட்டிருப்பதாக மாநில வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனிசா தல்ஹா கூறினார்.

இந்தப் பட்டியலில் சொந்த வீடுகளைப் பெறும் நடவடிக்கை மற்றும் கட்டுமானப் பணிக்கு உட்படுத்தப்பட்ட 541 வீடுகளும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

“செக்‌ஷன் 16 ரிம்பா ஜெயா அடுக்குமாடி(41), துன் தேஜா அடுக்குமாடி(5), கின்ராரா-பூச்சோங் தாமான் டாமாய் உத்தாமா (110),காப்பார், ஜாலான் கெராத்தாப்பி லாமா அடுக்குமாடி(64), அரிஸ்தா அடுக்குமாடி (11), அஸாரியா அடுக்குமாடி(50), அஸ்திரியா அடுக்குமாடி(50) மற்றும் பண்டார் ஸ்ரீ கோல்ஃபீல்ஸ்(10) ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன”என்றார் அவர்.
இவற்றைத் தவிர்த்து, செத்தியா அலாம் டீ கியாரா அடுக்குமாடி(30), செத்தியா அலாம் செரோஜா அடுக்குமாடி(11),  புக்கிட் திங்கி திரிஃபாலீஸ் அடுக்குமாடி(30) மற்றும் செராஸ் தாமிங் முத்தியாரா அடுக்குமாடி(30) ஆகிய வாடகை வீடுகளுக்காக  பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் சிலாங்கூர் விவேக வாடகை வீடுகள் குறித்த செமந்தா சட்டமன்ற உறுப்பினர் டாரோயா அல்வியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.


Pengarang :