SELANGOR

தடைபட்ட 62 வீடமைப்புத் திட்டங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின

 

ஷா ஆலம், மார்ச் 20-
26,361 வீடுகளை உள்ளடக்கிய தடைபட்ட 62 வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் யாவும் மார்ச் 2008 ஆண்டு தொடங்கி டிசம்பர் 2018ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்படவிருந்தவை எனத் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியத்தின் (எல்பிஎச்எஸ்) ஒத்துழைப்புடன் மாநில அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் வாயிலாக தடைபட்ட இந்த வீடமைப்புத் திட்டங்களில் ஆக்கப்பூர்வமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், இவற்றின் நிர்வாக நடவடிக்கைகளில் மட்டுமே தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பின்ர் ஹனிஸா தால்ஹா கூறினார்.

தடைபட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பைப் பெற பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

மேலும், வீடுகளை வாங்கிய பயனீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை உறுதிப்படுத்தும் கடிதத்தை அனுப்பியதோடு சிலாங்கூர் குடிநீர் நிறுவனம், தெனாகா நேஷனல் மற்றும் இண்டா வாட்டர் ஆகியவற்றுடன் எல்பிஎச்எஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்று ஹனிஸா கூறினார்.


Pengarang :