Projek perumahan
NATIONAL

தாமான் மங்கீஸ் பிபிஆர் பிரதமரின் அதிகாரி நேரடியாக கேட்டறிந்தார்

ஜோர்ஜ்டவுன், மார்ச் 8-

தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்புத் திட்ட குடியேற்றக்காரர்களின் நிலையை நேரில் கண்டறிய வந்த பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் செயலாளரை அவ்விடத்தில் இருந்து வெளியேறுவதற்கு சில குடியிருப்பாளர்கள் தடை விதித்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் தமது காரை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மகாதீரின் அரசியல் செயலாளரான அபு பாக்கார், பின்னர் போலீசார் துணையுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

முன்னதாக, தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலத் தவணைக்குப் பின்னரும் அங்கு குடியிருந்தது உட்பட சில நிபந்தனைகளை மீறியதால், அக்குடியிருப்பை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதாக பினாங்கு மாநில முதலமைச்சர் சான் கொன் இயோப் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனக் குமுறல்களையும் மாநில வீடமைப்புத் துறையினரின் விளக்கங்களையும் நேற்றிரவு அபு பாக்கார் நேரடியாக கேட்டறிந்தார்,

ஆயினும், பேச்சுவார்த்தையில் திருப்தியுறாத சிலர் பிரதமரின் அரசியல் செயலாளரை வழி மறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலையை பிரதமரிடம் தாம் நேரடியாக விளக்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் அபு பாக்கார் தெரிவித்தார்.


Pengarang :