SELANGOR

திறந்த வெளியில் டயர் எரிப்பு உடனடி நடவடிக்கை தேவை!

கிள்ளான் துறைமுகம், மார்ச் 15-

திறந்த வெளியில் பழைய டயர்களை எரித்த தெலுக் கோங் சட்டவிரோத தொழிற்சாலை மீது சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளான் துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹூரி கோரிக்கை விடுத்தார்.

பொறுப்பற்ற தரப்பினர் ஒவ்வோர் இரவும் மேற்கொள்ளும் இந்த டயர் எரிப்பு நடவடிக்கை சுற்றுப் புற பகுதியில் துர்நாற்றத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு அந்த சட்டவிரோத தொழிற்சாலையை மூட வேண்டும் என்று நானும் இந்தப் பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் பல முறை புகார் செய்துள்ளோம் என்று அஸ்மிசாம் கூறினார்.

ஆயினும், சுற்றுப் பகுதியில் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது என்றார் அவர்.

இந்த நிலை நீடித்தால், ஜோகூர் பாசீர் கூடாங்கில் ஏற்பட்ட சம்பவம் போல் தெலுக் கோங்கிலும் நடைபெறும் சாத்தியம் என்று அவர் சொன்னார்.


Pengarang :