NATIONAL

நிதி அமைச்சின் பெயரில் மோசடி நடவடிக்கை! மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

புத்ரா ஜெயா, மார்ச் 11-

நிதி அமைச்சையும் அதன் அமைச்சர் லிம் குவான் எங்கையும் தொடர்புப் படுத்தி இணையம் வழி மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் இந்தத் தரப்பினர் அமைச்சின் அதிகாரப்பூர்வ கடித வடிவமைப்பையும் முகவரியையும் பயன்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சின் பத்திரிகை செயலாளர் லுஃப்தி ஹாக்கிம் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், மின் அஞ்சல் வழி தான் பெற்ற நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ கடிதத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த அமைச்சுக்கு அழைத்த போது, இந்த விவகாரம் அம்பலமானதாக அவர் சொன்னார்.

அமைச்சின் மின் அஞ்சல் முகவரியில் இருந்து கிடைக்கப்பெற்ற மின் அஞ்சலில் நிதி அமைச்சின் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்ததையும் அந்நபர் குறிப்பிட்டதாக லுஃப்தி தெரிவித்தார்.

அக்கடிதத்தில் ‘பிளேக் டில்டுரொப்’ எனும் நபரை ஐக்கிய நாட்டு அமைப்பின் பிரதிநிதி என்றும் இவருடன் பரிவர்த்தனைகளை அமல்படுத்துவதற்கு நிதி அமைச்சு அதிகாரம் வழங்குவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாக அவர் சொன்னார்.


Pengarang :