NATIONAL

பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர் ஊக்குவிக்கப்படுவர்

புத்ரா ஜெயா, மார்ச் 7-

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பது குறித்து சுகாதார அமைச்சுடன் மகளிர், குடும்ப, சமூக மேம்பாடு அமைச்சு விவாதித்து வருகிறது.

பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்தும் சட்டவிதி தற்போது இல்லை என்றாலும் இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிப்பு நல்கி வருகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா கூறினார்.

பிள்ளைகளின் நலன் பெற்றோர்களின் பொறுப்பு என்றாலும் தொற்று நோய்களில் இருந்து பிள்ளைகளைத் தற்காப்பதற்கு இந்தத் தடுப்பூசி அவசியம் என்று இங்குள்ள பெர்சிந்த் 9(2) தேசிய பள்ளியில் நடைபெற்ற உடல் பேறு குறைந்தோருக்கு சிறப்பு அட்டைகளை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களின் வான் அஜீசா தெரிவித்தார்.

தடுப்பூசி போடாத பிள்ளைகளைப் பள்ளிகளில் பதிந்து கொள்ளக் கூடாது என்று சில தரப்பினர் கூறி வருவதைத் தொடர்ந்து தடுப்பூசி போடுவதும் கல்வி கற்கும் உரிமையும் இருவேறு விவகாரங்களாகும் என்று கல்வி அமைச்சர் அண்மையில் கூறியது குறித்து கேட்டபோது வான் அஜீசா மேற்கண்டவாறு பதிலளித்தார்.


Pengarang :