NATIONAL

மாஸ் விமான நிறுவனத்தை நிர்வகிக்க, ஏர் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ்?

கோலா லம்பூர், மார்ச் 21:

இழப்புக்குள்ளாகி இருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமான நிறுவனத்தை நிர்வகிக்க, ஏர் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டசுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஜெலுத்தோங் எம்பி ஆர்எஸ்என் ராயர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

“மாஸ்-ஐ மறு கட்டமைப்பு செய்து, அதை டோனி பெர்னாண்டஸ்-இடம் கொடுக்க வேண்டும். மாஸ் நிர்வாகத்தில் நாம் குறுக்கிடாமல் இருந்து, அவரால் அந்நிறுவனத்திற்கு இலாபத்தைக் கொண்டு வர முடிகிறதா என்று பார்ப்போம்.

“இது அணுசக்தி விஞ்ஞானம் அல்ல, மாஸ்-உடன் ஒப்பிடுகையில், ஏர் ஆசியா புதியது, ஆனால், அது இலாபகரமாக இருக்கிறது. எனவே, டோனி பெர்னாண்டஸ் மாஸ்-ஐ நிர்வகிக்கட்டும்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது கூறினார்.

நேற்று, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமத், நாட்டின் விமான நிறுவனமான மாஸ்-ஐ தாம் நேசிப்பதாகவும், ஆனால் அரசாங்கத்தால் அதனைக் காப்பாற்ற முடியாததால், விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

மேலும் கூறுகையில், இந்த ஆலோசனை மாஸ் மற்றும் ஏர் ஆசியாவை இணைக்கும் திட்டமல்ல என்றார் ராயர்.

“நஸ்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொள்ள, ஏர் ஆசியா ஆர்வம் கொண்டுள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.

“ஆனால், டோனி மாஸ் நிர்வாகத்தை எடுத்துகொண்டு, யாரையாவது பணி நீக்கம் செய்தால் அல்லது புதியதாக நியமித்தால், அது சரியான முடிவு என்றே நான் நம்புகிறேன்,” என்றார் ராயர்.

#மலேசிய இன்று


Pengarang :