SELANGOR

முன்னாள் விளையாட்டாளர்களின் நலனை மாநில அரசு பேணும்

ஷா ஆலம், மார்ச் 7-

தேசிய விளையாட்டாளர்கள் சமூகநல அறவாரியத்தின் பேராளர்கள் நேற்று மரியாதை நிமித்தம் இளைஞர், விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடுடின் ஒஸ்மானை நேற்று மாநில செயலகத்தில் சந்தித்தனர்.

இந்தப் பேராளர் குழுவில் தேசிய உடல் கட்டழகரும் ஆறு தடவை ஆசியாவின் வெற்றியாளராக வாகை சூடிய டத்தோ மாலேக் நூர், சிலாட் போட்டியின் முன்னாள் உலக சாம்பியன் ஜக்ரி இப்ராஹிம், காற்பந்தாட்ட ஜாம்பவான்கள் டத்தோ சந்தோக் சிங், ரெடுவான் அப்துல்லா மற்றும் காலிட் அலி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது விளையாட்டு போட்டிகளில் சிலாங்கூரைப் பிரதிநிதித்த 799 முன்னாள் விளையாட்டாளர்களின் நலன் குறித்து விவாதிக்கப்பட்டதாக முகமது கைருடின் தெரிவித்தார்.

சிலாங்கூரின் முன்னாள் விளையாட்டாளர்களின் நலனைப் பேணுவதில் மாநில அரசாங்கம் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

விளையாட்டுத் துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். மேலும் அவர்களின் நலனில் மாநில அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :