SELANGOR

வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு அரசு முதல் கட்ட உதவி

கோம்பாக், மார்ச் 29-

புயலால் பாதிப்புற்ற 13 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேருக்கு உடனடி உதவிகளை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சு இன்று வழங்கியது.

கூடாரம், குளியல் பொருட்கள், போர்வை மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய உதவிப் பொருட்களை இங்குள்ள கம்போங் கோம்பாக் உத்தாரா, டேவான் ஓராங் அஸ்லியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்தில் அதன் துணை அமைச்சர் ஹான்னா இயோ எடுத்து வழங்கினார்.

உடனடி உதவியைத் தவிர்த்து, புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதோடு பழுதடைந்த வீடுகளை சரிசெய்வதற்குத் தேவையான உதவிகளையும் தமது அமைச்சு வழங்கும் என்று ஹான்னா தெரிவித்தார்.

“இந்த இயற்கை பேரிடரால் மன உளைச்சலுக்கு இலக்காகியுள்ளோருக்கு ஆலோசனை வழங்க மன நல ஆலோசகர்களை அனுப்பி வைக்குமாறு சமூக நல இலாகாவிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன்” என்றார் அவர்.

நேற்றிரவு வரை, இந்த நிவாரண மையத்தில் மொத்தம் 13 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :