NATIONAL

இந்தியர்கள் ஓரங்கட்டப்படவில்லை ‘நண்பன்’ குற்றச்சாட்டை கல்வி அமைச்சு மறுத்தது

புத்ரா ஜெயா, ஏப்.2-

கல்வித் துறையில் இந்திய சமூகத்திற்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்று தமிழ் நாளேடு ஒன்று வெளியிட்ட அறிக்கையை மலேசிய கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

உண்மையை ஆராயாமல் புள்ளி விபரங்களில்லாமல் இப்படி ஓர் அறிக்கையை மலேசிய நண்பன் வெளியிட்டிருக்கக் கூடாது என்றும் கல்வியமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

கல்வித் துறைக்குத் தேவையான மனித ஆற்றலை தேர்வு செய்வது கல்வி அமைச்சு அல்ல. மாறாக அந்தப் பணியை கல்வி சேவை ஆணையமே (எஸ்பிபி) மேற்கொள்கிறது என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.

தேவையை பூர்த்தி செய்ய எஸ்பிபி-யிடம் விண்ணப்பிக்கும் போது அந்தப் பதவிக்கு இனம், சமயம் அல்லது ஆண்/பெண் என்ற பாகுபாடு எதனையும் கல்வி அமைச்சு நிபந்தனையாக விதிப்பதில்லை என்று அது வலியுறுத்தியது.

அதேபோன்று, அந்த ஆணையமும் பணிக்கமர்த்தப்படுபவரின் தகுதிகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறது என்று கல்வி அமைச்சு நம்புவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

எனவே, அந்நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் தங்கள் தரப்பின் மீது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளதாகவும் கல்வி அமைச்சின் அறிக்கை கூறியது.

தரமான கல்வியைத் தயார் செய்வதற்கு அனைத்து மலேசியர்களின் பங்களிப்பும் கல்வித் துறைக்கு தேவை என்றும் மலேசிய கல்வி அமைச்சும் கல்வி சேவை ஆணையமும் எந்த்வோர் இனத்தையும் ஒதுக்கியது இல்லை என்றும் அவ்வறிக்கை வலியுறுத்தியது.


Pengarang :