NATIONAL

குடியேற்றக்காரர்களின் மேம்பாட்டிற்காக பெல்டா நிலங்களில் பல்வேறு திட்டங்கள்

கோலாலம்பூர், ஏப்.24:

61 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பெல்டா குடியேற்றத் திட்டத்தில் 317 நிலங்களில் செம்பனை மரமும் ரப்பர் மரமும் முதன்மை நடவுகளாக இருந்து வந்துள்ளன.

ஆயினும், நாடு முழுவதிலும் 490,000 ஹெக்டர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இவ்விரு மூலப் பொருட்களின் நிலையற்ற விலை காரணமாக அரசாங்கத்தோடு பெல்டா மற்றும் அதன் குடியேற்றக்காரர்களும் தொடர்ந்து சவால்களை சந்தித்து வந்துள்ளனர்.

இவற்றின் சந்தை விலை தற்போது குறைவாக இருப்பதைத் தவிர்த்து செம்பனை எண்ணெய்க்கு எதிராக மேற்கத்திய நாடுகள் செய்து வரும் பிரச்சாரங்களும் இந்த பொருளின் சந்தைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தரப்பினருக்கு வாழ்க்கைச் செலவின உதவி தொகையும் விளைச்சல் முன்பணமாக மாதந்தோறும் பெல்டாவிடமிருந்து 1,500 வெள்ளி வழங்கப்பட்ட போதிலும் வசதியான வாழ்க்கை முறையைத் தொடர 11,365 பெல்டா குடியேற்றக்காரர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

பெல்டாவைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பாதுகாப்பை நோக்கி பெல்டா எனும் கருப் பொருளைக் கொண்ட பெல்டா வெள்ளை அறிக்கையை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பெல்டா திட்டத்தை சீரமைத்து சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கொண்டிள்ள கடப்பாட்டை உறுதிசெய்யும் வகையில் இதன் மறுமலர்ச்சி திட்டங்களுக்கு உதவி நிதி, கடனுதவி மற்றும் அரசாங்க உத்தரவாத ஆவணம் போன்றவற்றை வழங்க 6.23 பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :