NATIONAL

கேமரன் மலை விவசாயிகள் பகாங் மாநில அரசுக்கு எதிராக கண்டனப் பேரணி

கேமரன் மலை, ஏப்ரல் 1:

கேமரன் மலை விவசாயிகளின் வெளியேற்றத்தைக் கண்டித்து, பகாங் மாநில அரசாங்கத்திற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அமைதி ஊர்வலத்தில் ஜசெக கட்சி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

பகாங் சுல்தான் மீதான விசுவாசத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாக, அவர்கள் தங்களின் கைகளில் மஞ்சள் நிற பூக்களை ஏந்தி, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். 

இந்தக் கூட்டத்தில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் மற்றும் சாபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரை ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக நிலத்தில் பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு மாநில அரசு மாநில விதித்த கொடுமை இது என இராமசாமி குறிப்பிட்டார்.

கடந்த 1969-ஆம் ஆண்டில் விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால நில உரிமத்தையும் அவர் ஆதாரமாகக் காட்டினார்.

இதற்கிடையில், இம்மாதிரியான உரிமங்கள் கடந்த 26 வருடத்திற்கு முன்னதாக வழங்கப்பட்டது எனவும், இராமசாமி கூறுவது போல, 60 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டது அல்ல என பகாங் மாநில முதலைமச்சர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :