SELANGOR

சிப்பாங்கிற்கு வருகை புரிவதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள்

சைபர்ஜெயா, ஏப். 8-

2020 சிப்பாங்கிற்கு வருகை புரியும் ஆண்டையொட்டி சுற்றுப் பயணிகளைக் கவர்வதற்காக சிப்பாங் நகராண்மைக் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

சிப்பாங்கில் சுற்றுப் பயணிகளைக் கவரும் இடங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கான பொருட்களை அறிமுகப்படுத்துவதும் இவற்றில் அடங்கும் என்று இக்கழகத்தின் தலைவர் முகமது பாஃவ்சி யாத்திம் தெரிவித்தார்.

அதே வேளையில், அவ்வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற டிராகன் பழ விழாவையும் தாங்கள் அறிமுகப்படுத்தவிருப்பதாக முகமது பாஃவ்சி மேலும் கூறினார்.

“சுற்றுப் பயணிகளுக்கு வசதியாக தங்கும் இடத்திலேயே நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்வது குறித்து தாங்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

“கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ) மற்றும் கேஎல்ஐஏ 2 என இரண்டு முக்கிய நுழைவாயில்களை சிப்பாங் கொண்டிருப்பது தனிச் சிறப்பாகும். இதன் வழி இங்குள்ள சிறப்பு அம்சங்களை சுற்றுப் பயணிகளிடத்தில் பிரபலப்படுத்தலாம்” என்றார் அவர்.

சிப்பாங்கிற்கு அடுத்த ஆண்டு 50 லட்சம் சுற்றுப் பயணிகள் வருகை புரிவர் என்று சிப்பாங் நகராண்மைக் கழகம் இலக்கு வகுத்துள்ளது. இதன் வழி 5 பில்லியன் வெள்ளி வருமானத்தை ஈட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :