NATIONAL

பக்காத்தான் ஆட்சி ஓராண்டு நிறைவு: வாக்குறுதிகளில் 5 நிறைவேற்றப்பட்டன, 18 விரைவில் நிறைவேற்றப்படும்

கோலாலம்பூர், ஏப்.23-

14ஆவது பொது தேர்தலின் போது பக்காத்தான் கூட்டணி தெரிவித்த வாக்குறுதிகளில் கடந்த ஓராண்டில் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் முயற்சியாக ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் பிரிம் உதவித் தொகைக்குப் பதிலாக வாழ்க்கை செலவின உதவித் திட்டமும் பொது போக்குவரத்தை 30 நாட்களுக்கு வரம்பு ஏதுமின்றி பயன்படுத்த மை50 மற்றும் மை100 எனும் மாதாந்திர அட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன என்று ஐடியாஸ் எனப்படும் பொருளாதார விவகார ஜனநாயக கழகத்தின் பொருளாதார நிபுணர் அட்லி அமிருல்லா கூறினார்.

வாழ்க்கைச் செலவினத்திற்குத் தேவையான எந்தவொரு முக்கிய திட்டமும் தோல்வியடையவில்லை. வழங்கப்பட்ட 23 வாக்குறுதிகளில் ஐந்து நிறைவேற்றப்பட்டுள்ளன, மேலும் 18 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

அரசாங்கத்திடம் அரசியல் பலம் இருப்பதை நாம் பார்க்கிறோம். வாழ்க்கை செலவினத்தை குறைப்பதற்கான திட்டங்களும் அதனிடம் உள்ளது. ஆயினும், அமல்படுத்தப்படும் திட்டங்களால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து அரசாங்கம் ஆராய்வதும் முக்கியமாகும் என்று பெர்னாமா செய்தி நிறுனத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கருத்துரைத்தார்.


Pengarang :