SELANGOR

பி40 & எம் 40 பிரிவினருக்கு பிரத்தியேக வீடமைப்பு திட்டம் -மந்திரி பெசார்

ஷா ஆலாம், ஏப். 2:

மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பி40 மற்றும் எம் 40 பிரிவினருக்கான பிரத்தியேக வீடமைப்பு திட்டத்தை விரைவில் தொடக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதில்   இம்மாநில  மக்கள் எதிர்நோக்கும்    பிரச்னைக்கு  சிலாங்கூர்  மந்திரி பெசார் கழகம் (எம்பிஐ) மற்றும் பெர்மோடாலான் சிலாங்கூர் பெர்ஹாட் ஆகியவற்றின் வாயிலாக  தற்போது   தீர்வு
காணப்பட்டுள்ளது.
வசதி குறைந்தவர்களுக்கு உதவும் வழிமுறையை எம்பிஐ ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் மாநிலத்திற்கான இதன் நடவடிக்கை பிரிவு தலைமை அதிகாரி சோஃபான் அஃபெண்டி  அமினுடின் தெரிவித்தார்.
அதே சமயம், சந்தையில் வீடுகள் அதிக விலையில்  காணப்படுவதையும் தாங்கள் கருத்தில் கொண்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

“இதன் பொருட்டு சிலாங்கூர் மக்களின் கனவு வீடுகள் கட்டப்படுகின்றன. நிதி நிறுவனங்களின் அணுக்கமான ஒத்துழைப்புடன் உயர் புத்தாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளும் விவேக பங்காளித்துவ திட்டமே இது” என்றார் சோஃபான்.

” 1000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்த வீடுகள் மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள் மற்றும் இரண்டு கார் நிறுத்துமிடங்களைக் கொண்டிருக்கும். ஒரு வீட்டின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மட்டுமே” என்று சிலாங்கூர் கினியிடம் சோஃபான் தெரிவித்தார்.
ஒவ்வொரு கனவு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிக்கான  அலமாரி, சமையல் சாதனங்களுக்கான அலமாரி,ஒவ்வோர் அறையிலும் குளிரூட்டி மற்றும் குளியல் அறையில் சுடுநீர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

காஜாங், பாங்கி, அம்பாங், ஷா ஆலாம், சைபர் ஜெயா, டிங்கில், செத்தியா ஆலாம், கிள்ளான் மற்றும் பண்டார் சௌஜானா புத்ரா ஆகிய இடங்களில் இந்த வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்.


Pengarang :