NATIONAL

கால மாறுதலுக்கு ஏற்ப தொழிலாளர்களின் திறனாற்றல் மேம்பட வேண்டும்

கோலாலம்பூர், மே 1-

கால மாறுதலுக்கு ஏற்ப தொழிலாளர்கள் தங்கள் திறனாற்றலை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்..

நாடு தற்போது தானியங்கிமயம், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, ரோபோடிக் மற்றும் இணைய பொருள்கள் ஆகியவற்றை அதிகம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருவதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தனது தொழிலாளர் தின செய்தியில் அஸ்மின் வலியுறுத்தினார்.

“புதிய சவால்களை எதிர்கொள்ள நாமும் தொழில்நுட்பத்தை முழுவதுமாக கற்றறிய வேண்டும்” என்றார்..

மலேசிய தொழிலாளர்களிடையே காணப்படும் திறனாற்றல் வழி உலக சந்தையில் போட்டியிடும் ஆற்றலை நாடு பெற்றிருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் இன்றி நாடு இந்த செழிப்பை அடைந்திருக்க இயலாது என்றார் அவர்.

ஒட்டு மொத்தத்தில், உள்நாட்டு தொழிலாளர்களின் உற்பத்தி ஆற்றல் ஆண்டுதோறும் உயர்ந்து வருகின்றது. 2018ஆம் ஆண்டு அது 3.4 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.


Pengarang :