SELANGOR

குழாய் பழுது பார்ப்பு பணி தாமதத்திற்கு நில அதிர்வே காரணம்!

கிள்ளான், மே 7-

பந்திங் – தைப்பிங் மேற்கு கரை நெடுஞ்சாலை திட்ட கட்டுமானப் பகுதிக்கு அருகே உள்ள மூன்று முக்கிய தண்ணீர் குழாய்கள் அமைந்துள்ள பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி குடிநீர் விநியோகம் தடைபட்ட பகுதியில் உள்ள மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எதிர்பாராத நில அதிர்வு சம்பவத்தினால் குழாய்களைப் பழுது பார்க்கும் பணி தடைபட்டுள்ளது என்று அடிப்படை வசதி, பொது வசதி, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்து தொழிற்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கூறினார்.

மாநில அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை வாரியமும் நில அதிர்வு ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.

இது ஒரு சிறிய பிரச்னை அல்ல, மாறாக 1400,900 மற்றும் 600 அளவிலான மூன்று முக்கிய குழாய்கள் அமைந்துள்ள பகுதி சம்பந்தப்பட்டது என்றார் அவர்.

“நில அதிர்வு ஏற்பட்டதற்கான மூல காரணம் குறித்து நெடுஞ்சாலை தரப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் இன்னும் பெரியதாக மாறுவதைத் தடுக்க இந்த விசாரணை அவசியமாகிறது” என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :