NATIONAL

நிதியமைச்சர்: என்எப்சி முழு கடனையும் செலுத்த வேண்டும்

புத்ரா ஜெயா, மே 20:

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) இன்னும் கொடுபடாமலிருக்கும் கடன்தொகையான ரிம253.6 மில்லியனை முழுமையாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிதி அமைச்சு கூறியது. இத்தொகை வட்டி, தாமதச் செலுத்தத்துக்கான தண்டம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

கடன் தொகை முழுவதையும் திரும்பப் பெற நிதி அமைச்சு விரும்புவதாகவும் அது பற்றிச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தி இருப்பதாகவும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

“ஏஜி அலுவலகம் அவ்விவகாரம் குறித்து ஆராய்கிறது. மேலே என்ன செய்யலாம் என்று அது தெரிவிக்கும்”, என்று அமைச்சர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

என்எப்சி 2007 டிசம்பர் 6-இல், இரைச்சிக்கு மாடுகள் வளர்க்கும் திட்டத்துக்காக ரிம250 மில்லியன் கடனை நிதி அமைச்சிடமிருந்து பெற்றது. இரண்டு விழுக்காடு வட்டியில் 20 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்த அது ஒப்புக்கொண்டது.

ஆனால், வாங்கிய கடனை அது சொத்து வாங்குவதற்கும் வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்திக் கொண்டது 2012-இல் அம்பலமானது.

கடனை அது திருப்பிச் செலுத்தவில்லை. இன்னும் கொடுபடாதிருக்கும் கடன் தொகை, வட்டியெல்லாம் சேர்த்து 253,618,455.03 என்று லிம் கூறினார்.

அந்நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்தில் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவர் முகம்மட் சாலேயும் அவர்களின் பிள்ளைகள் இஸான் சாலே, இஸ்மிர் சாலே, இஸ்ஸானா சாலே ஆகியோர் இருந்தனர். இப்போது சாலே மட்டுமே ஒரே இயக்குனராக உள்ளார்.

#மலேசிய கினி


Pengarang :