NATIONAL

நேர்மையாக இருங்கள்! பிபிஆர் என்பது ஒரு முதலீடு அல்ல

கோலாலம்பூர், மே 1-

மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் (பிபிஆர்) வசிக்கும் மக்களைப் பற்றி அவ்வப்போது பிரதான ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் வழி பல்வேறு செய்திகளை நாம் படித்து வருகிறோம்.

பிபிஆர் வீடுகளுக்கான வாடகை பாக்கி, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுதல், வாடகை வீட்டை மற்றவருக்கு வாடகை விடுதல் போன்ற சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்வுயுற்றுள்ளோம்.

அண்மையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நண்பரைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்த போது , அவருக்கு அருகில் இருந்த கட்டிலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அவருடைய பிள்ளையிடம் பேசிய உரையாடல் காதில் விழுந்தது.
50 வயது மதிக்கத்தக்க அந்த மாது தனது பிபிஆர் வீட்டைப் பற்றி தன் மகனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா. வாடகையைக் கேட்டா டிபிகேஎல்லில் புகார் செய்வேன்னு அந்த ஆளு மிரட்டறாருடா”.
“இதென்னம்மா அநியாயமா இருக்கு, நமக்கு அந்த ஆளு பல மாசமா வாடகை கொடுக்கலன்னு கேட்கப் போனா, நம்மளைப் பற்றி டிபிகேஎல்லே புகார் பண்ணினா நம்ம நிலைமை என்னவாகும்?” என்று அவரது மகன் கூறினான்.

இந்த இருவருடைய உரையாடலில் இருந்து ஒரு விஷயம் எனக்கு தெளிவாகப் புரிந்தது. இவர்கள் வறுமை நிலையில் இருந்த போது இந்த பிபிஆர் வீட்டிற்கு மனு செய்து அதில் குடியேறியுள்ளனர். இப்போது வசதியாக இருப்பதால் வேறொரு வீட்டிற்கு மாறியுள்ளனர். ஆனால், தாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டை மாநகராட்சி மன்றத்திடம் ஒப்படைக்காமல் மற்றவரிடம் வாடகைக்கு விட்டு அதில் லாபம் பெற்று வந்துள்ளனர்.

இது சட்டப்படி குற்றமாகும். அதே வேளையில், வீடில்லாமல் தவிக்கும் பிறருக்கு இழைக்கும் துரோகமாகும் என்று இவரைப் போன்றவர்கள் உணர்வதில்லை.


Pengarang :