NATIONAL

பக்காத்தான் ஹராப்பான் ஓராண்டு நிறைவு: சுகாதார அமைச்சின் சாதனைகளில் பெகா பி40 திட்டமும் அடங்கும்

புத்ரா ஜெயா, மே 3-

ஓராண்டு பக்காத்தான் அரசாங்கத்தின் ஆட்சியில் பி 40 தரப்பினருக்கான பெடுலி செஹாட் திட்டம் (பெகா பி40), வலி நிர்வாக திட்டம் மற்றும் மருந்து விலை கட்டுப்பாட்டு திட்டம் ஆகியவை சுகாதார அமைச்சின் சாதனைத் திட்டங்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

அதே வேளையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி அமைக்கப்பட்ட சுகாதார ஆலோசகர் மன்றமும் இந்தச் சாதனைப் பட்டியலில் அடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார். நாட்டில் சுகாதார முறையை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த மன்றம் கவனம் செலுத்தும்.

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வரை பெகா 40 முன்னோடி திட்டத்தின் கீழ் 2,443 பேர் சுகாதார சோதனை மேற்கொண்டதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் விவரித்தார்.
“இத்திட்டத்திற்கான செலவை அரசாங்கமே முழுமையாக ஏற்றுக் கொண்டது. இந்த இலவச திட்டத்தில் 8 லட்சம் பேருக்கு 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :