SELANGOR

ரமலான் மாதத்தில் வருகை புரியத் தவறினால், மன்னிக்கவும்! – மந்திரி பெசார் அமிருடின் ஷாரி

பத்து கேவ்ஸ், மே 6-

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் வருகை புரியும் தாம் இவ்வாண்டு அவ்வாறு செய்ய முடியாமல் போனால், அதற்காகத் தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு இத்யா ரமலான் பொருளுதவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

“மாநிலத்தின் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுள்ள காரணத்தால், மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவோடு மக்களுடனான நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய சூழலில், சில பகுதிகளுக்கு நான் செல்ல வாய்ப்பில்லாமல் போகலாம்” என்றார் அவர்.

“ஒவ்வோர் ஆண்டும் செலாயாங்கில் உள்ள தாமான் ஜாசா சூராவ் மற்றும் அல்-அப்ரார் சூராவ் ஆகியவற்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இவ்வாண்டு அவர்களின் அழைப்பை நான் ஏற்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :