NATIONAL

வர்த்தகங்களில் அந்நிய நாட்டவர்கள் ஆக்கிரமிப்பு : எளிதான வழியில் லாபமடைய விரும்புவதே காரணம்!

கோலாலம்பூர், மே 22-

எளிதான முறையில் லாபமடைய விரும்பும் உள்நாட்டவர்களின் மனப்போக்கே தலைநகரில் வர்த்தகங்களை அந்நிய நாட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கான முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

தங்கள் வர்த்தக உரிமங்கள் அல்லது இடங்களை அந்நிய நாட்டவர்களிடம் வாடகைக்கு விடுவதன் மூலம் உடனடி லாபம் கிடைக்கும் என்ற உள்நாட்டு வர்த்தகர்களின் எண்ணமே இந்த ஆக்கிரமிப்பிற்கு வித்திடுகிறது.

சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர் மன்றம் முற்படும்போது, உள்நாட்டவர் குறுக்கிட்டு இது தனது வர்த்தகம் என்றும் அந்நிய நாட்டவர் தன்னிடம் பணி புரிவதாகக் கூறுவது தமது தரப்புக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமாட் கூறினார்.

அந்நிய நாட்டவர்கள் இந்நாட்டில் வர்த்தகம் புரிய தகுதி பெறவில்லை என்பதால் அத்தரப்பினருக்கு வாணிப உரிமம் எதனையும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் இதுவரையில் வெளியிட்டதில்லை என்றார் அவர்.

“ஆயினும், இது தங்களுடைய வர்த்தகம் என்று உள்நாட்டவர் கூறுவதால், நடவடிக்கை எடுப்பதற்கு சிரமமாக இருக்கிறது” என்றார்.

எனவே, அவர்கள் தொடர்ந்து வணிகம் புரிவதற்கு அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்று மஸ்ஜிட் ஜாமேக் கம்போங் பாருவில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் காலிட் தெரிவித்தார்.


Pengarang :