Selangorkini
NATIONAL

“உலக நாயகன்” எஸ்.சுரேஷ்க்கு பாராட்டுக்கள் குவிகின்றன..

புத்ரா ஜெயா, ஜூன் 13:

நெதர்லாந்தின் ஹெர்டோஜேன்போக்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆன்டுக்கான உலக பாரா அம்பு எய்தல் போட்டியில் வெற்றியாளர் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ள, எஸ். சுரேஷ் இன்று நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் அவர்களின் அலுவலகத்தில் சிறப்பு செய்யப்பட்டார்.

இதற்கு முன்பு, கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் ஷாடிக், நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மாபெரும் வரவேற்பு விழா கொடுத்து ‘உலக நாயகன்’ எஸ்.சுரேஷ்க்கு உற்சாகம் பொங்க செய்தது குறிப்பிடத்தக்கது.

கெடாவின் கோலக் கெட்டில் பிறந்த சுரேஷ் , 13 வயதில் தமது தந்தை செல்வத்தம்பி, ஓட்டிச் சென்ற லாரி சாலை விபத்தில் சிக்கிக் கொண்டுப்போது,  தனது இடது காலை இழந்தார். செயற்கை காலுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று  குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளமால் அவருடைய தந்தை குடும்பத்தை தவிக்க விட்டு சென்றார்.

இதனால் நிர்கதி நிலைக்குத் தள்ளப்பட்ட சுரேஷின் அம்மா, தேவானி சந்திரன் தமது மூன்று பிள்ளைகளை வளர்ப்பதற்காக ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 2010 ஆம் ஆண்டில் சுரேஷின் ஒரே தங்கையான கார்த்தியாயினியும்சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

அம்பு எய்தல் விளையாட்டில் தாம் ஈடுபட்டப்போது, பலர் தாம் எதற்கும் உதவாத ஒரு பிள்ளை என தம் தாயாரிடம் நேரடியாகக் கூறியதாக சுரேஷ் தெரிவித்தார். எனினும் உலக அளவில் இன்று தாம் அடைந்துள்ள வெற்றி தம்மை எதிர்மறையாக விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி என சுரேஷ் மேலும் குறிப்பிட்டார்.

உலக பாரா விளையாட்டுப் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றதன் மூலம் கிடைக்கவிருக்கும் பரிசுத் தொகையை பயன்படுத்தி தங்கள் குடும்பத்திற்காக ஒரு வீட்டை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக சுரேஷ் கூறினார். தேசிய விளையாட்டு மன்றத்தின் பரிசுத் தொகைத் திட்டத்தின் கீழ் சுரேஷிற்கு 80 ஆயிரம் ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்படவிருக்கிறது.

உலக பாரா விளையாட்டுப் போட்டியில் சுரேஷ், அமெரிக்காவின் எரிக் பென்னேட்டை வீழ்த்தி வெற்றியாளர் பட்டம் வென்ற வேளையில் 2020 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளார். ஆக கடைசியாக 2011 ஆம் ஆண்டில் காலஞ்சென்ற சலாம் சீடேக் அம்பு எய்தல் போட்டியில் மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடதக்கது.

2012 ஆம் ஆண்டில் அம்பு எய்தல் விளையாட்டில் தாம் கவனம் செலுத்த ஆரம்பித்ததாக சுரேஷ் கூறினார். அப்போது கோலக் கெட்டில் தம்மைப் பார்க்க வந்த முன்னாள் தேசிய அம்பு எய்தல் வீரர் டி. சுரேஷ் , பயிற்றுனர் எம். புவனேஸ்வரன் புதிய விளையாட்டாளர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக தம்மிடம் கூறியதாக  சுரேஷ் கூறினார். அப்போது கெடா குரூணில் தாம் தொழில்திறன் பயிற்சி கழகம் ஒன்றில் படித்துக் கொண்டிருந்ததாக சுரேஷ் தெரிவித்தார்.

அதேவேளையில் 2012 ஆம் ஆண்டில் நடந்த பாரா சுக்மா போட்டியில் சுரேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். எனினும் குடும்ப செலவுகளுக்காக வேலை செய்யத் தொடங்கியதால் தம்மால் தொடர்ந்து பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என சுரேஷ் தெரிவித்தார். எனினும் 2013 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டு மன்றம் தம்மை தேசிய அம்பு எய்தல் அணியில் சேர்த்துக் கொண்டதாக அவர் கூறினார்.

2014 ஆம் ஆண்டில் மியான்மாரில் நடைபெற்ற ஆசியான் பாரா போட்டியில் கலந்துக் கொண்ட சுரேஷ், 2017 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார். எனினும் இரண்டுப் போட்டிகளிலும் அவர் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தம்மை மாநில அணிகளுடன் பயிற்சிகளைத் தொடருமாறு தேசிய விளையாட்டு மன்றம் தமக்கு உத்தவிட்டதாக சுரேஷ் தெரிவித்தார்.

மாநில அணிக்கு சென்றப் பின்னர் மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் தீவிர பயிற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார். அதன் பலனாக தேசிய அளவில் முதல் தரவரிசையைப் பெற்று உலக பாரா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் ஒன்றைப் பிடிக்க வேண்டும் என தமக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வெற்றியாளர் பட்டம் வென்று சுரேஷ் சாதனைப் படைத்துள்ளார். இந்திய சமுதாயத்தை தலைநிமிர்ந்து பார்க்க வைத்த “உலக நாயகன்” எஸ்.சுரேஷ்க்கு சிலாங்கூர் இன்று ஆசிரியர் குழுவின் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.


Pengarang :