NATIONAL

கடன் சுமைகளால் வீடுகள் வாங்குவதில் இளைஞர்களுக்கு பெரும் சிக்கல்

ஷா ஆலம், ஜூன் 7-

தங்கள் முதல் வீட்டை வாங்குவதில் இளைஞர்களுக்கு பெரும் சவாலாக இருப்பவை வீடுகளின் விலை மற்றும் அதற்கான அதிகமான முன்பணம் ஆகியவை மட்டுமல்ல. பல்வேறு நிதிச்சுமைகளும் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
கடன்பற்று அட்டைக்கான கடன், வாகன தவணைக் கட்டணம், உயர் கல்வி கடன் (பிடிபிடிஎன்) போன்றவை இளைய தலைமுறையினரில் பலருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

தனது உயர் கல்வி கடன் மற்றும் வாகன தவணைக் கட்டணம் ஆகியவற்றை திரும்பச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக வீட்டை வாங்குவதற்கு கடனுதவி பெறுவதில் தான் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அமீர் அபு பக்கார் (வயது 27) கூறுகிறார்.

மேற்கண்ட இரு கடன்களுக்கான தவணைக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதன் காரணமாகவே தனது பெயர் சிசிஆர்ஐஎஸ் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகக் கூறுகிறார் ஷா ஆலமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேலாளராகப் பணி புரியும் அமீர்.

“இந்தப் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதால், வீடுகள் வாங்குவதற்கான எனது கடனுதவி விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கின்றன” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
உயர் கல்வி மற்றும் வாகனம் ஆகியவற்றுக்கான கடன் பாக்கி தொகை பெரிய அளவில் இல்லையென்றாலும், வீட்டிற்கான கடனுதவியைப் பெறுவதில் தான் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதற்காக ரூமா சிலாங்கூர்கூ எனும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆனால், இளைஞர்களில் பலர் மேற்கூறப்பட்ட கடன்களால் வீடுகளை வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.


Pengarang :