SELANGOR

கிள்ளான் சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

கிள்ளான் துறைமுகம், ஜூன் 3-

சுற்றுச் சூழல் தூய்மைக்கேடு மற்றும் சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மக்களை அச்சுறுத்தும் நெகிழி திடப் பொருள் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை முடக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூரில் சட்ட விரோதமாக நெகிழி திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற முடிவில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
“மூடும்படி உத்தரவிடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படுவதைத் தடுக்க அவற்றின் குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்தை தடை செய்வதே சிறந்த வழி என எனது அனுபவத்தில் நான் அறிந்துள்ளேன்” என்றார் அவர்.

ஊராட்சி மன்றத்திடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன் எரிசக்தி ஆணையம் மற்றும் தேசிய குடிநீர் ஆணையம் ஆகியவை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்த சேவையை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஆணையங்களுக்கு தாம் கோரிக்கை வைக்கப் போவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :