SELANGOR

குழாய் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவு கோம்பாக் மக்கள் நிம்மதி பெருமூச்சு

ஷா ஆலாம், ஜூன் 18-

தாமான் பிரிமா ஸ்ரீ கோம்பாக்கில் குழாய் பழுதுபார்ப்பு பணிகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்பணிகள் யாவும் திங்கட்கிழமை இரவு மணி 10.30க்கு நிறைவு பெற்றதையடுத்து குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இச்சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு மற்றும் தகவல் நிர்வாக பிரிவு தலைவர் அப்துல் ராவுஃப் அகமது கூறினார்.

“கண்காணிப்பு பணிகள் இன்று காலை மணி 6.00 வரை மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கினர்” என்றார் அவர்.
“இந்த அசெளகரியத்திற்காக நாங்கள் வருந்துகிறோம்” என்று அறிக்கை ஒன்றின் வழி அப்துல் ராவுஃப் குறிப்பிட்டார்.
தாமான் பிரிமா ஸ்ரீ கோம்பாக் ஃபேமிலி மார்ட் முன்பு குழாய் உடைந்ததைத் தொடர்ந்து கோம்பாக் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 33 பகுதிகளில் நேற்று முன் தினம் திட்டமிடப்படாத குடிநீர் தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.


Pengarang :