SELANGOR

சீஃபீல்ட் ஆலய இடமாற்ற விவகாரம்: மத்தியஸ்தராக மாநில அரசு செயல்படும்

சிப்பாங், ஜூன் 10-

பொது மக்களின் கவனத்தை ஈர்த்த சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 25, சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றும் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. இந்த ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றும் விவகாரத்தில் மாநில அரசாங்கம் மத்தியஸ்தராகச் செயல்படுவதோடு இச்சூழல் அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்தும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், பொது அமைதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பேணுவதில் அனைத்து தரப்பினரும் நீதிமன்ற முடிவை மதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“நாம் பொறுமை காப்பதோடு கலந்தாலோசனையும் நடத்த வேண்டும். நான் இதற்கு முன்பு கூறியதைப் போல நீதிமன்ற தீர்ப்பு எத்தகையதானாலும் பொது மக்கள் மற்றும் ஆலயத்தின் அமைதி மீதான விவகாரத்தை நாம் அவசியம் கையாள வேண்டும் என்றார் மந்திரி பெசார்.

“தவிர, ஆலயம் செயல்படுவதோடு சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேம்பாடு காண்பது உட்பட அனைத்து தரப்பினருக்கும் சாதகமான ஒரு சூழல் உருவாவதை உறுதிப்படுத்தும் பொருட்டு இவ்விவகாரத்தில் மத்தியஸ்தராகச் செயல்பட மாநில அரசு தயாராக உள்ளது” என்று இங்கு சிப்பாங் விமான பொறியியல் துறையில் மலேசியாவின் முதலாவது விவேக ரேடம் பயிற்சி பட்டறையைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.


Pengarang :