SELANGOR

லத்தீஃபாவின் நியமனம்: பிரதமரின் உரிமையாகும் -சாலே அமிருடின்

ஷா ஆலம், ஜூன் 7-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைவராக லத்தீஃபா கோயாவை நியமனம் செய்தது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் இறுதி முடிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எஸ்பிஆர்எம்மின் 694ஆவது சட்டத்தின் 5(1) பிரிவிற்கு ஏற்ப இந்த நியமனம் அமைந்துள்ளதாக பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநில தொடர்பு பிரிவு தலைவர் சாலே அமிருடின் கூறினார்.

பிரதமர் பரிந்துரை செய்யும் ஒருவரை எஸ்பிஆர்எம் தலைவராக மாட்சிமை தங்கிய பேரரசர் நியமனம் செய்வார். அந்த நியமனக் கடிதத்தில் குறிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் தவணைக் காலத்திற்கு ஏற்ப அந்த நியமனம் அமைந்திருக்கும் என்றார் அவர்.

“முந்தைய அரசாங்கம் பின்பற்றிய சட்டப்பிரிவான 694 சட்டம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. இதன்படி இந்த நியமனம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவோ, பக்காத்தான் கூட்டணி தலைமைத்துவ மன்றம் அல்லது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெறவோ தேவையில்லை. இது பிரதமரின் தனிப்பட்ட உரிமையாகும்” என்றும் அவர் சொன்னார்.

பிரதமரின் இந்த நியமனம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களின் நடவடிக்கை குறித்து சாலே கேள்வி எழுப்பினார்.


Pengarang :