SELANGOR

அந்நியரிடமிருந்து உள்நாட்டவர்’ என்ற கருப் பொருளுடன் மீண்டும் சிலாங்கூர் மெகா வேலை சந்தை

ஷா ஆலம், ஜூலை 10-

‘அந்நியரிடமிருந்து உள்நாட்டவர்’ என்ற கருப் பொருளுடன் சிலாங்கூர் மெகா வேலை சந்தை 2019 மீண்டும் நவம்பர் மாதத்தில் ஷா ஆலமில் நடைபெறவிருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் செர்டாங்கில் நடைபெற்ற இந்த சந்தைக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளையோர் மற்றும் விளையாட்டு மேம்பாடு, மனித மூல தன மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது இன்சான் கைருடின் ஓஸ்மான் தெரிவித்தார்.

“மாநிலத்தில் உள்ள பல தொழில்திறன் பயிற்சிக் கழகங்களின் ஒத்துழைப்புடன் ‘அந்நியரிடமிருந்து உள்நாட்டவர்’ என்ற இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது” என்றார் அவர்.

“சமையல், தங்கும் விடுதி துறை மற்றும் பல்வேறு துறைகளுக்குத் தேவையான திறன் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.
தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்குப் பதிலாக இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தனது தரப்பு உறுதி செய்யும் என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக, இந்த வேலை சந்தையில் பங்கு பெறுவோருக்கு வேலைகளை வழங்க 20 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அவை மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பளிக்க ஒப்புக் கொண்டுள்ளன. இச்சந்தையின் மூலம் 11,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற தகவலையும் இன்சான் வெளியிட்டார்.


Pengarang :