SELANGOR

சிலாங்கூர் சாலை பெயர்ப் பலகைகள்: தேசிய மொழியில் மட்டுமே!

ஷா ஆலம், ஜூலை 4-

சிலாங்கூரில் அனைத்து சாலை பெயர்ப் பலகைகளில் தேசிய மொழி மட்டுமே இனி பயன்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
இந்நடவடிக்கையானது அரசியல் சட்டமைப்பின் 1963/1967ஆம் ஆண்டு தேசிய மொழி சட்டம் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சியாளரின் உரைக்கு ஏற்பவும் அமைந்துள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமிருடின் தெரிவித்தார்.

தேசிய மொழியை முதன்மைப்படுத்தும் வகையில் சாலை பெயர்ப் பலகையில் மட்டுமல்லாது மாநில அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பலகைகளிலும் தேசிய மொழி மட்டுமே இடம்பெற வேண்டும் என்று ஆட்சியாளர் உரை நிகழ்த்தியதை அவ்வறிக்கை குறிப்பிட்டது.

மேலும், மலாய் ஆட்சியாளர்களின் நிலை, மலாய்க்காரர்களின் சிறப்புரிமை, அதிகாரப்பூர்வ சமயமாக இஸ்லாம் மற்றும் தேசிய மொழியாக மலாய் மொழி என அரசியல் சட்ட அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்ந்து பேணப்படும் என்ற பக்காத்தான் கூட்டணியின் வாக்குறுதிக்கு ஏற்ப இம்முடிவு அமைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.


Pengarang :