NATIONAL

ஜூரைடா: பிரிமா திட்டத்தின் இலக்கு மீதான அறிக்கை அடுத்த மாதம் தயாராகிவிடும்!

போர்ட்டிக்சன், ஜூலை 4-

பிரிமா எனப்படும் ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் இலக்கு மீதான நடவடிக்கை அறிக்கை அடுத்த மாதம் நிறைவடையும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

“இந்நோக்கத்திற்காக பிரிமா தலைவர் டான்ஸ்ரீ எடி சென் லோக் லோய் தலைமையிலான கழக உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு கலந்துரையாடல் நடத்தவிருக்கிறது. இதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விவகாரங்கள் மற்றும் பிரிமா வீடமைப்புத் திட்டத்திற்கான தீர்வு குறித்து விவாதிக்கப்படும்” என்றார் அவர்..

“பிரிமா கழகத்தின் உறுப்பினர்கள் கடந்த ஓராண்டு காலமாக இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 94 வீடமைப்புத் திட்டங்களையும் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் அதிகளவு ஆபத்து மற்றும் குறைந்த அளவு ஆபத்து நிறைந்தவை என்று வகைப்படுத்தியுள்ளனர்” என்றும் அவர் சொன்னார்.

“ஆகையால், குறைந்த ஆபத்தை கொண்ட திட்டங்களை நாம் முதலில் பூர்த்தி செய்வோம். இவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு அதிக ஆபத்தைக் கொண்ட திட்டங்களைப் பூர்த்தி செய்யலாம் என்பதே அவர்கள் முன்வைத்த பரிந்துரையாகும்” என்றார் அவர்.


Pengarang :