NATIONAL

ஜூரைடா: பிரதமர் ஆதரவு இழந்து விட்டார் என்ற கூற்று ஒரு அவதூறு ஆகும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஆதரவை இழந்து விட்டார் என்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர்களின் நம்பிக்கையை  பெற தவறி விட்டார் என்ற செய்தி அவதூறு ஆகும் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜூரைடா கமாரூடின் கூறினார். மக்களின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சி இது என்று மேலும் அவர் தெரிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் சாவும் கட்டத்தில் உள்ளது என்ற எதிர்க் கட்சிகளின் பறைசாற்றும் செய்தியில் எந்த அடிப்படையும் இல்லை என்று விவரித்தார்.

” எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகளே. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உறுப்புக் கட்சிகள் அனைத்தும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அவர்களின் தலைமைத்துவத்தை முழுமையாக  ஆதரிக்கின்றனர். ஆகவே, துன் மகாதீருக்கு ஆதரவு இல்லை என்றும் அவர் தனிமையில் விடப் பட்டார் என்ற செய்தி முற்றிலும் உண்மை இல்லை,” என்று ஜூரைடா கமாரூடின் தெளிவு படுத்தினார்.

இன்று சிலாங்கூர் மாநில அனைத்து தொகுதிகளின் மகளிர் பிரிவின் ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு ஜூரைடா கமாரூடின் பேசினார். அவரோடு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி, கெஅடிலான் கட்சியின் மகளிர் அணி தலைவி ஹானிஸா தல்ஹா  மற்றும் சிலாங்கூர் மாநில மகளிர் அணி தலைவி டாக்டர் டாரோயா அல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்துரைக்கையில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சருமான அவர், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் டாக்டர் மகாதீர் நாட்டை நிர்வகிக்க தொடர்ந்து ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் தருவதாக உறுதி அளித்தார்.

” நான் ஒரு அமைச்சர் என்ற முறையில் துன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு அளிக்கிறேன். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நான் கண்டிப்பாக ஆதரவு கொடுக்க வேண்டும். தொடர்ந்து எனக்கு கொடுத்த பணிகளை நேர்த்தியான முறையில் செயல்படுத்த வேண்டும். எல்லா அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும். பதவிப் பிரமாணம் எடுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பணிகளை திறம்பட செயல்பட வேண்டும்,” என்று ஆணித்தரமான ஜூரைடா கூறினார்.

சமூக வலைதளத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹீட் ஹாமீடி பாக்காத்தான் ஹாராப்பான் தனது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்ற செய்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜூரைடா கமாரூடின் இவ்வாறு பேசினார்.

#பெர்னாமா


Pengarang :