NATIONAL

சேவியர் ஜெயகுமார்: அமைச்சர்களின் பணிவைப் பயமென எண்ண வேண்டாம்

புத்ராஜெயா, டிசம்பர் 28:

மக்களின் துன்பங்களில் அரசியல் இலாபம் தேடுவது மனிதச் செயல் அல்ல, இப்படிப்பட்ட வேளைகளில் விடும் அறிக்கைகளில் உண்மைகள் இருந்தாலும் பாதிக்கப் பட்டவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதால் அமைதியாக இருப்பது நாங்கள் மாயமானதாகவோ குற்றவாளிகள் என்றோ அர்த்தமில்லை என்பதனைத் தி.மோகனுக்கும் மற்றும் மலேசிய நண்பனுக்கும் உணர்த்த வேண்டிய அபாக்கியத்திற்கு வருந்துகிறேன் என்றார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

இன்றைய அமைச்சரவையில் 41\2 அமைச்சர்களுடன் சட்டத்துறை தலைவரையும் சேர்த்து 5 1\2 அமைச்சர்களை இந்தியச் சமுதாயம் பெற்றுள்ளது. நாட்டின் மொத்த ஜனத்தொகையில் சுமார் ஏழே விழுக்காடக உள்ள இந்தியர்களுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமா என்ற கேள்வியைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் அம்னோ தொடுக்கிறது. அதே பாணியில் அறிக்கை விடுவதின் வழி, அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பதைக் கண்டு இவர்கள்  பொறாமை படுகிறார்கள், அவர்களின் மன உளைச்சலின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதனையே காட்டுகிறது.

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நல்வழி காட்டவே 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன்பது என்று கூறியுள்ளார். உங்களை அழிக்க உங்களிடமுள்ள பொறாமை குணம் ஒன்றே போதும் என்று. இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 5 1\2 அமைச்சர்களை விட மலாய் சீனச் சமூகங்களுக்கு அதிகம் வழங்கப்பட்டுள்ளது. அச்சமுகங்களின் மேம்பாட்டிலும் நிறைய அதிருப்திகள் இருந்தாலும் அமைச்சரவை இடங்களின் எண்ணிக்கையை அவர்கள் எதற்கும் ஒப்பிடுவதில்லை.

நாடு சுதந்திரத்திற்கு முன்பு கொண்டிருந்ததை எல்லாம் ஒரே அமைச்சர் இருந்த காலத்தில் இந்தியர்கள் இழந்ததை ஏற்றமெனக் கூறும் அறிவிலி தனத்தை என்னவென்று சொல்வது என கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

அன்று தேசியப் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு 28 விழுக்காடு பாரிசானின் 60 ஆண்டுக்கால ஆட்சியில் 1.1 விழுக்காடானது. அதேப்போல் 24 விழுக்காடாக இருந்த மக்கள் தொகை 7 விழுக்காடானதே! 7.9 விழுக்காடாக இருந்த உயர் கல்விக்கூட மாணவர் எண்ணிக்கை 0-9 விழுக்காடாகி விட்டதே. இந்தியர்களுக்குச் சொந்தமாக 3 வங்கிகள் இருந்தன இன்றைக்கு ஆண்டிக் கோலம். 1960 ம் ஆண்டில் இந்தியர்களுக்குச் சொந்தமாக இருந்த நிலம் 37 விழுக்காடு 0.8 விழுக்காடு ஆனது. இவை அனைத்தையும் விட அரசாங்கச் சேவையில் கொடிகட்டி ஆண்ட இனத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விட்டக் கட்சி ஒற்றை அமைச்சர் சாதனையைப் புகழ்வது இந்தியர்களின் பத்திசாலி தனத்திற்குச் சவால் விடுவதாகும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் என்றார் அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

நாட்டு மேம்பாட்டில் வேறு எந்தத் திறமையுமின்றி வெறும் இன வாதத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஊறி வளர்ந்த அம்னோ, இன்று அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையைப் பக்காத்தானுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மலாய்க்காரர்களிடம் பயன் படுத்துகிறது.

இன்றைய அமைச்சரவையில் 41\2 அமைச்சர்கள் அல்ல சட்டத்துறை தலைவரையும் சேர்த்து 5 1\2 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதில் இந்தியச் சமுதாயம் பெருமை படுகிறது. இந்த நாடு மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இந்நேரத்தில் இந்தியர்களின் உழைப்புக்கு, திறமைக்கு, நேர்மைக்கு, விசுவாசத்திற்கு நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்டுள்ள மாபெரும் அங்கீகாரமாகும்.

இந்த நாட்டு பேரரசர், பிரதமர் மற்றும் நாட்டு மக்கள் மலேசிய இந்திய வம்சாவழியினர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கி, இந்த நாட்டு வளங்களை மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தி, அவர்கள் ஒற்றுமையுடன் வாழ, நாடு நலன் பெறப் பாடுபடுவதுதான் அமைச்சர்களின் தலையாய கடமையாகும். அதுவே இந்தச் சமுதாயத்தின் உன்னதத் தன்மையை அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் சிறந்த செயல் முறையாகும். நாட்டின் எதிர்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் மாபெரும் பொக்கிஷமாக அமையும்..

மலேசிய இந்திய வம்சாவழியினருக்கு 5 1\2 அமைச்சர்கள் என்பது ஒரு கௌரவம்.. மலேசிய இந்திய வம்சாவழி குறுதியை உடலில் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அது குறித்துப் பெருமைப்படுவர் பூரிப்படைவர் என்பதில் ஐயமில்லை.

ம.இ.கா அம்னோவின் கைப்பாவை, அம்னோவின் அடிமை என்று பல அரசியல் மேடைகளில், வர்ணிக்கப்பட்டதை நான் கேட்டதுண்டு. அதனை மெய்யென நிரூபிக்கும் வண்ணம், சக இந்தியர்களுக்கு நாட்டில் அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ள இத்தகைய கௌரவத்தின் மீது, நம்பிக்கையின் மீது தாக்குதல் நடத்தும் மூர்க்கர்களும் உண்டு என்பதனைக் காண்பது துர்பாக்கியமே! இவர்கள் சுய அறிவுடன் செயல்படுகிறார்களா என்ற கேள்வி மலேசிய இந்தியர்களின் மனதில் எழவே செய்யும்.

இப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டு வேதனை படுவதுடன், அது மலமேயானாலும் அம்னோவிடமிருந்து வெளிவருவதால் அதனை வாயில் வாங்கிச் சக இனத்தின் மீது உமிழும் குணத்தைக் கண்டு வெட்கப் படுகிறேன்.

ம.இ.கா விற்கு எங்கள் மீது கோபம் இருக்கலாம், சொந்த இனத்தை, ஏழை விவசாயிகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றுவீர்கள், எத்தனைக் ஆண்டுகள், எத்தனை குடும்பங்களின் வாழ்வை அம்னோவின் அகோர இனவெறிக்குப் பலியிடுவீர்கள் என்பதே மக்களின் கேள்வி? மாநில மந்திரி புசாரின் அடாவடித்தனத்தை, அத்துமீறலைக் கண்டித்துப் பகாங் மாநிலத் தொடர்பு குழு தலைவரும் ம.இ.கா நகராட்சி உறுப்பினர்களும் பதவி துறந்த பின்பும் ஒரு மேலவை உறுப்பினருக்குத் தெளிவு பிறக்க வில்லையா? அல்லது அதனைப் புரிந்துகொள்ளும் அடிப்படை சாதுரியம் கூட இல்லையா?

ஒரு மாநிலத்தில் உள்ள நில விவகாரத்தில் முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது என்பது கூடத் தெரியாதா? விவசாயிகள் விவசாயம் செய்யவும், காடுகளை அழிக்கவும் மாநில அரசிடமிருந்து அனுமதி பெறுகிறார்கள், நிலத்தைப் பயன்படுத்துவதற்கான வரியையும் மாநில அரசிடம் வழங்குகிறார்கள். அவர்கள் விவசாய நிலம் அழிக்கப்பட்டால் மட்டும் மத்திய அரசுமீது பழிபோடுவது முறையில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கும் வேளையில், ஒரு மேலவை உறுப்பினர் உளறலைக் கண்டு பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 23 ந் தேதி நடந்த துயரச் சம்பவத்தை அடுத்துக் கேமரன் மலை காடுகளைக் காப்பதும், திடீர் வெள்ளத்தை, நிலச் சரிவைத் தடுப்பதும், நீர் தூய்மையைக் காப்பதும் பெரிய பொருள் மற்றும் உயிர் சேதங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கவே, அப்போதிலிருந்து மாநில அரசுக்குச் சில ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஆனால், சுங்கை இட்சாசை சார்ந்த 60 இந்திய விவசாயிகளைத் தனிமைப்படுத்தியோ அல்லது வேறு எந்தத் தனிப்பட்ட நிலத்தையோ, பிரிவினரையோ குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு என்றும் உத்தரவிட்டதில்லை என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கோ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கோ மட்டுமே விவசாய மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருக்க வேண்டும் என்பது அல்ல. பகாங் மாநில அம்னோ அரசாங்கத்தின் செயலை நியாயப்படுத்த முயலும் த.மோகன் ஒரு மேலவை உறுப்பினர் என்ற ரீதியில் கூட, ஆண்டு இறுதியில் மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டும், பூத்துக் குலுங்கும் தோட்டத்தை இப்பொழுது அழிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை மாநில மந்திரி புசாருக்கு அவர் சமர்ப்பித்திருப்பாரா?

பகாங் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது, அதே தொகுதியில் ஆண்டாண்டு காலமாகச் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ம.இ.கா இருந்த காலத்தில் அந்த ஏழை விவசாயிகளின் நிலங்களுக்கு ஏன் பட்டா வாங்கித் தரவில்லை? ஏழை விவசாயிகளை யார் வஞ்சித்தது? இதற்குப் பின்பாவது அங்கே புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்யும் இந்தியர்களுக்குப் பட்டா வாங்கித்தர ம.இ.கா முயலுமா? இல்லை தொடர்ந்து அம்னோவின் இனவெறி நடவடிக்கையை நியாயப்படுத்தி அடுத்த தேர்தலில் சீட்டு வாங்குவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுவார செனட்டர் த.மோகன் என்று கேட்டார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


Pengarang :