NATIONAL

பிளஸ் நிறுவனத்தின் 10 டோல் சாவடிகளில் ஆர்எஃப்ஐடி கட்டண முறை அமலாக்கம்

கோலாலம்பூர், டிச.30-

புத்தாண்டில் ஜனவரி முதல் தேதி தொடங்கி பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனத்தின் 10 நெடுஞ்சாலை சாவடிகளில் ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தும் முறைக்காண சாவடிகள் திறக்கப்படவுள்ளன.
பயணத் தூரம் கணக்கிடப்படாமல் டோல் விதிக்கும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை (ஜித்ரா மற்றும் கெம்பாஸ்), பட்டவெர்த்- கூலிம் ( லூனாஸ் மற்றும் குபாங் செமாங்) சிரம்பான் நெடுஞ்சாலை – போர்ட்டிக்சான் (மாம்பாவ் மற்றும் லுக்குட்), இரண்டாவது தொடர்பு நெடுஞ்சாலை (இரண்டாவது லிங்க்) மற்றும் பினாங்கு பாலம் ஆகியவற்றில் இப்புதிய கட்டண முறைக்கானத் தனிச் சாவடிகள் திறக்கப்படும்.

இந்த முறையைப் பயன்படுத்துகையில், டோல் கட்டணம் செலுத்துவதற்காக வாகனமோட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி அட்டையைத் தொட வேண்டிய அவசியமில்லாதால் வாகனங்களின் போக்குவரத்து மேலும் சீராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முறையின் கீழ் வாகனமோட்டிகள் இணையம் மூலம் தங்கள் மின் – பணப்பையின் மதிப்பை எளிதாக அதிகரித்துக் கொள்ள முடியும் என்று அதன அமலாக்கப் பிரிவுத் தலைமை அதிகாரி ஜக்காரியா அகமது ஜாபிடி தெரிவித்தார்.

அது தவிர்த்து, மின்னியல் அட்டையில் போதுமான தொகை இல்லை, ஸ்மார்ட் தெக் அட்டை காணாமல் போவது அல்லது பேட்டரி தீர்ந்து போயிற்று அல்லது சரியாகப் பொறுத்தப்படவில்லை என்ற பிரச்னைகளை இப்புதிய கட்டண முறை குறைக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“ஆயினும், நடப்பில் உள்ள டச் அண்ட் கோ அல்லது ஸ்மார்ட் தெக் பயன்பாடும் தொடரும் என்பதால் அவற்றுக்கான சாவடிகளும் பிளஸ் நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து இயங்கும்.

அதேவேளையில், சுல்தான் இஸ்கந்தர் டோல் கட்டடத்தில் இந்த கட்டண முறை சிங்கப்பூர் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்” என்றார் அவர்.
இதனிடையே, ஆர்எஃப்ஐடி டச் அண்ட் கோ வில்லைகளைக் கொண்டுள்ளவர்கள் தங்கள் மின் பணப்பையில் போதுமான தொகை இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பயணம் இன்னும் சிறப்பாக அமையும் என்று அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :