NATIONAL

2020 ஜனவரி முதல் தேதி தொடங்கி உணவகங்களில் புகைப்பிடித்தால் அபராதம்!

ஷா ஆலம், டிச.30-

உணவகங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் சட்டம் 2020 ஜனவரி முதல் தேதி மலேசிய சுகாதார அமைச்சு முழுமையாக அமலாக்கும். இக்குற்றத்திற்காக அதிகபட்ச அபராதம் ரிம. 350 விதிக்கப்படும்.
தங்கள் உணவகத்தில் புகைப்படிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கும் உள்ளது.

பொறுப்பில் தவறும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். உணவகம் உட்பட புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் புகைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். முதல் முறையாக இக்குற்றத்தைப் புரிபவர்களின் அபராதம் 150 ரிங்கிட்டாகக் குறைக்கப்படும்.

ஆயினும் அவர்கள் இந்த அபராதத் தொகையை ஒரு மாதக் காலத்திற்குள் மாவட்ட சுகாதார அலுவலகங்களில் செலுத்துவது அவசியமாகும் என்றார் அவர்.
இக்குற்றத்தை இரண்டாவது முறையாகப் புரிபவர்களுக்கு முழுமையான அபராதத் தொகையான 250 ரிங்கிட் விதிக்கப்படும். அதேவேளையில், மூன்றாவது அல்லது அதற்கும் அதிகமான முறை இக்குற்றத்தைப் புரிவோருக்கு 350 ரிங்கிட் விதிக்கப்படும் என்றார்.

இதே காலக் கட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது முறையாக குற்றமிழைக்கும் உணவக உரிமையாளருக்கு 250 ரிங்கிட் அபராதமாக விதிக்கப்படும் என்றும் மூன்றாவது முறை மற்றும் அதற்கும் அதிகமான முறை தவறிழைக்கு உணவகங்களுக்கு 350 ரிங்கிட் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :