NATIONAL

மது போதையில் வாகனத்தைச் செலுத்துவோருக்கு கடும் தண்டனை

புத்ராஜெயா, ஜன. 30-

மது போதை மற்றும் போதைப் பொருள் உட்கொண்டு வாகனத்தைச் செலுத்துவோர் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வாகனத்தை ஆபத்தான வகையில் செலுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்ட திட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பில் உள்ள தண்டனைகளை கடுமையாக மாற்ற வகை செய்வதற்கு 1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் 41,41 மற்றும் 45 பிரிவுகள் மறு ஆய்வு செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியுவ் ஃபூக் கூறினார்.

“இந்த சட்ட திருந்த மசோதா ஜூலை மாதம் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னர், இது குறித்து போலீஸ், தேசிய சட்டத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.
நடப்பில் உள்ள 45ஆம் பிரிவின்படி 100 மில்லி கிராம் ரத்தில் 80 மில்லிகிராம் அளவு மது இருந்தால் குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த அளவு உலக சுகாதார அமைப்பின் விதிக்கு ஏற்ப 100 மில்லி கிராம் ரத்தத்தில் 50 மில்லிகிராம் மது என்று திருத்தம் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

நடப்பில் உள்ள சட்டம், உலக சுகாதார அமைப்பின் விதிமுறைக்கு ஏற்புடைய அளவில் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். அதே வேளையில், 41ஆம் பிரிவு திருத்தம் செய்யப்பட்டு மரணத்தை சம்பவிக்கும் அளவிற்கு கவனம் குறைவாக வாகனமோட்டுவோருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை , அதிக பட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று திருத்தம் செய்யப்படுவதோடு இக்குற்றத்திற்கு 5 ஆயிரம் ரிங்கிட் முதல் 20 ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :