NATIONAL

சபா மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் ?

கோத்தா கினபாலு, ஜூலை 29:

சபா மாநிலத்தில் சில கூட்டணி கட்சிகளின் மூலம் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான எளிய பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாக,  அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், டான் ஸ்ரீ மூசா அமான் புதன்கிழமை கூறியிருக்கிறார். இருப்பினும்,  அவ்விவகாரம் குறித்து, கோத்தா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த மூசா, தற்போதைய முதலமைச்சரும், சபா வாரிசான் கட்சியின் தலைவருமாகிய டத்தோ ஶ்ரீ முஹமட் ஷாபியி அப்டால் தலைமையிலான மாநில அரசின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கான எளிய பெரும்பான்மையின் எண்ணிக்கையை கூறவில்லை.

இதன் தொடர்பில், தாம் கூடிய விரைவில் அம்மாநிலத்தின் சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, மாநில ஆளுநர், துன் ஜுஹார் மஹிருடினை சந்திக்கவிருப்பதாகவும் மூசா தெரிவித்திருக்கிறார். அதோடு, தாம் தலைமையேற்கவிருக்கும், கூட்டணிக்கு ஆதரவாக தங்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சில சட்டமன்ற  உறுப்பினர்களின் உறுதிமொழிக் கடிதத்தையும் தாம் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சபாவில் தற்போது 65 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய முன்னணி ஆட்சியின் போது மாநில முதலமைச்சராக இருந்த மூசா, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மாநில சட்டசபையில் குறைந்தது 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும்.

— பெர்னாமா


Pengarang :