NATIONAL

நாட்டின் மூத்த நடிகர் கலைமாமணி காந்திநாதன் காலமானார் !!!

கோலா லம்பூர், ஜூலை 3:
நாட்டில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட மூத்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் கலைமாமணி காந்திநாதன் இன்று அம்பாங் மருத்துவமனையில் காலமானார்.

பேரா, தைப்பிங்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய கலைத்துறையின் மின்னும் நட்சத்திரமாக விளங்கியுள்ளார். 60-ஆம் 70-ஆம் ஆண்டுகளில் மேடை நாடகம் தொடங்கி, வானொலி நாடகம், தொலைக்காட்சி படம், தொலைக்காட்சி தொடர், விளம்பரங்கள் என்று, இவர் கால் பதிக்காத இடங்களே இல்லை எனலாம்.

அதிலும் ஆண்டுதோறும் பெட்ரோனாஸ் விளம்பரத்தில் இவர் நடிப்பதால் பெட்ரோனாஸ் தாத்தா என்றே இவரைச் செல்லமாக அழைப்பர். இவரின் குடும்பமே கலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர். அதிலும் முத்தாய்ப்பாக மறைந்த காந்திநாதனின் தாயார் மேடையில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவர் பிறந்துள்ளார். அதனால்தான் என்னவோ இத்தனை ஆண்டுகளாக மலேசியக் கலைத்துறையின் முடிசூடா மன்னனாக காந்திநாதன் விளங்கியுள்ளார்.

இவரின் கலையாற்றலுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைமாமணி, கலைச்சக்கரவர்த்தி, நகைச்சுவை மன்னன் உள்ளிட்ட பல அங்கீகாரங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக இயக்குநர் பிரகாஷின் இயக்கத்தில் ஞாபகம் இருக்கிறதா என்ற தொலைக்காட்சி திரைப்படத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக இவர் நடித்துள்ளார். உயர் அழுத்தத்தின் காரணமாக 72 வயதுடைய காந்திநாதன் இன்று அம்பாங் மருத்துவமனையில் காலமானார்.

#பெர்னாமா


Pengarang :