ECONOMYNATIONAL

நாடாளுமன்றத்தை கூட்டுவதை தவிர்க்கவே அவசர கால அமலாக்க முயற்சி -அன்வார்

ஷா ஆலம், அக் 24- நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை தவிர்ப்பதற்காகவே மத்திய அரசாங்கம் கோவிட்-19 நோய்த் தொற்றை காரணம் காட்டி அவசர காலத்தை பிரகடனப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அவசர கால அமலாக்க முயற்சி குறித்து கவலை தெரிவித்த அவர், டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கமே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு காரணமாக விளங்குவதோடு இந்நடவடிக்கை சர்வாதிகாரத்திற்கு வழிகோலும் சாத்தியம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே அவசரகாலத்தை பிரகடனப்படுத்த முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

குறுகிய மனப்பான்மையும் சுயநலமும் கொண்ட இந்த முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னையை சமாளிப்பதிலும் பொருளாதார சிக்கலை எதிர்கொள்வதிலும் தேசிய கூட்டணி அரசாங்கம் பலவீனமாக உள்ளதை இந்த நடவடிக்கை காட்டுகிறது என்றார் அவர்.

நெருக்கடிகளை சமாளிப்பதில் எத்தகைய வியூகங்கள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை நம்மால் அறிய முடியவில்லை. ஜனநாயகத்தைப் பலவீனமாக்கி நோய்த் தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்த பதவியில் உள்ளவர்கள் முயற்சிப்பதை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது எனவும் அன்வார் சொன்னார்.

இந்த நோய்த் தொற்று பரவல் காலத்தில் ஆக்ககரமான நிர்வாகத் திறனை வெளிப்படுத்துவதில் பதவியில் உள்ளவர்கள் தோல்வி கண்டு விட்டனர். மாறாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜனநாயகத்தை பலியிட அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.


Pengarang :