ALAM SEKITAR & CUACASAINS & INOVASI

கடல் பெருக்கு- கடலோர நடவடிக்கைகளை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், நவ 10- இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில்  பெரிய அளவில் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மூன்றாவது முறையாக ஏற்படும் இந்த கடல் பெருக்கை எதிர்கொள்ள உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாக மாநில பேரிடர் நிர்வாகத்தின் நடவடிக்கை பிரிவு அதிகாரி முகமது இஸாட் ஹசிக் முகமது நோர் கூறினார்.

கடல் பெருக்கின் போது கடுமையாக  மழை பெய்யும் பட்சத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. தவிர, பொது முடக்கத்தின் போது இந்த கடல் பெருக்கு ஏற்படுவதால் தற்காலிக நிவாரண மையங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் விஷயத்தில் நிர்வாக நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

உதாரணத்திற்கு, 20 பேரை தங்க வைக்கும் வசதி கொண்ட மண்டபத்தில் கூடல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு குறைவான எண்ணிக்கையிலானோர் மட்டுமே தங்க வைக்கப்படுவர் என்று அவர் மேலும் சொன்னார்.

கடல் பெருக்கினால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கிள்ளான், கோல லங்காட், சிப்பாங், கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய இடங்களில் தற்காலிக நிவாரண மையங்களை அமைப்பதற்கான இடங்களைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கடல் பெருக்கின் போது 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அலைகள் 5.8 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளிலும் அக்டோபர் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும் கடல் பெருக்கு ஏற்பட்டது. மூன்றாவது முறையாக இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மீண்டும் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :